டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் கார்களை அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள நுங்கம்பாக்கம் பகுதியில் விவிலியா டிரான்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த டிராவல்ஸ் நிறுவனத்தில் ஏராளமானோர் தங்களது கார்களை வாடகைக்கு விட்டுள்ளனர். இந்த நிறுவனத்தின் உரிமையாளரான அருண் குமார் என்பவர் காரின் உரிமையாளர்களுக்கு ஒழுங்காக வாடகை தொகையை கொடுப்பதில்லை என பல்வேறு புகார்கள் வந்துள்ளது. மேலும் வாடகைக்கு வந்த கார்களை உரிமையாளர்களுக்கு தெரியாமல் அடமானம் வைத்து அருண்குமார் பணம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து வந்த புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து நுங்கம்பாக்கம் காவல்துறையினர் அருண்குமாரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் வாடகைக்கு வந்த கார்களை அடமானம் வைத்து பணம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இவர் ஆர்.சி புத்தகத்தின் நகலை எடுத்து 3 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை காரை அடமானம் வைத்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அடமானம் வைக்கப்பட்ட 12 சொகுசு கார்களை காவல்துறையினர் மீட்டனர். மேலும் 9 கார்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.