கொரோனா அறிகுறியுடன் ஒரு பெண் சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமானநிலையத்திற்கு பயணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக இந்திய அரசின் சார்பில் மலேசியா, துபாய், சிங்கப்பூர், ஓமன் போன்ற நாடுகளில் இருந்து சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இந்த விமானத்தில் பயணம் செய்பவர்கள் எந்த நாட்டிலிருந்து பயணம் செய்கிறார்களோ அந்த நாட்டு அரசின் சார்பில் பயணம் செய்பவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இல்லை என்ற சான்றிதழ் பெற்ற பின்பே அவர்கள் விமானத்தில் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சிக்கு 169 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இந்த விமானத்தில் நோய்க்கான அறிகுறி உள்ளது என சான்றிதழுடன் புதுக்கோட்டை மாவட்டத்தில் வசித்து வரும் 38 வயது பெண் பயணி ஒருவருக்கு விமானத்தில் பயணம் செய்வதற்கு அனுமதி அளித்தது தெரியவந்துள்ளது. இதனால் மாவட்ட கலெக்டருக்கும், நோய் தடுப்பு அதிகாரிகளுக்கும் விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக தகவல் தெரிவித்து விட்டனர்.
இதனையடுத்து அதிகாரிகள் திருச்சி விமான நிலையத்திற்கு விரைந்து வந்து அந்த பெண்ணை சோதனை செய்து விட்டு அவரை திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அதோடு இந்திய அரசின் விதிமுறைகளை மீறி கொரோனா அறிகுறி உள்ள பயணியை திருச்சி விமான நிலையத்தில் அழைத்து வருவது கடந்த ஒரு வாரத்தில் இது இரண்டாவது முறை என தெரியவந்ததால், திருச்சி விமான நிலைய பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.