பேருந்தில் படிக்கட்டுகளில் மாணவர்கள் ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணம் செய்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீப காலமாக மாணவர்கள் பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. இதுபோல் ஆபத்தான முறையில் பயணம் செய்வது தவறு என பலமுறை காவல்துறை அறிவுறுத்தியும் கூட அதனை கேட்காமல் தொடந்து மாணவர்கள் படிகளில் பயணம் செய்கின்றனர். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பில்லூர், குச்சிபாளையம், கோலியனூர், பஞ்சமாதேவி போன்ற பகுதிகளை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் விழுப்புரம் நகருக்கு கல்வி கற்க வருகின்றனர்.
இந்நிலையில் பில்லூரில் இருந்து விழுப்புரத்திற்கு குறைந்த அளவிலே பேருந்துகள் இயக்கப்படுவதால் பள்ளி, கல்லூரிக்கு செல்லகூடிய மாணவர்கள் ஒரே பேருந்தில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற ஆபத்தான பயணத்தை கட்டுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு ஏற்றபடி பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.