ஆட்சியர் அலுவலகம் முன்பு டிராவெல்ஸ் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
கரூரில் உள்ள பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் பாஸ்கர்-சுதா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பாஸ்கர் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்று நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் டிராவல்ஸ் நிறுவனத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாஸ்கர் குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல் தவித்து வந்துள்ளார். மேலும் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மனவேதனையில் இருந்துள்ளார்.
ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் வெளியூருக்கு சவாரி சென்றுள்ளார். பின்பு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த அவர், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வேனை நிறுத்தியுள்ளார். பின்னர் கையில் பெட்ரோலுடன் கீழே இறங்கி சென்று உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்து பலத்த காயமடைந்த பாஸ்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சென்ற காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாஸ்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் வந்த வாகனத்தை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். அப்போது அந்த வாகனத்தில் கடிதம் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அக்கடிதத்தில் பேருந்து கூண்டு கட்டும் உரிமையாளர் ஒருவரிடம் ரூபாய் 2 லட்சத்து 40 ஆயிரம் கொடுத்ததாகவும் அவர் அதனைத் திருப்பி தராமல் ஏமாற்றி விட்டார் என்றும் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. அக்கடிதத்தின் அடிப்படையில் பேருந்து கூண்டு கட்டும் உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.