ஓசூர் அருகே பிளஸ் டூ மாணவியின் தேர்ச்சியை ஒரு கிராமமே கொண்டாடி வருகிறது.
தமிழகத்தில் மாணவர்களுக்கான கல்லூரி சேர்க்கை விரைவாக தொடங்க இருப்பதன் காரணமாக நேற்று பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் திடீரென வெளியாகின. தேர்வு முடிவுகளில் மாணவ-மாணவிகளின் தேர்ச்சி விகிதமும் வெளியானது. திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடத்தை பெற்றது. இந்நிலையில் பல பகுதிகளிலும் தங்களது பிள்ளைகள் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதை குடும்ப உறுப்பினர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலமங்கலம் எனும் பழங்குடியினர் வசிக்கும் கிராமத்தில் ஒரு மாணவி 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதை அந்த கிராமமே கொண்டாடி வருகிறது. அதற்கான காரணம், அந்தக் கிராமத்தில் இதுவரை ஒருவர் கூட எட்டாம் வகுப்பை தாண்டியது இல்லையாம். இந்நிலையில் அப்பகுதியில் வசித்து வரும் கிருஷ்ணவேணி என்பவர் முதல் முறையாக பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து 295 மதிப்பெண்களுடன் அந்த கிராமத்திலையே +2 தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் பெண்ணாக திகழ்கிறார். இவரது இந்த தேர்ச்சி கிராம மக்களிடையே கல்வி குறித்த ஒரு நம்பிக்கையை விதைத்துள்ள நிலையில், மாணவியின் வெற்றியை கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர்.