தடுப்பூசி போடுவதற்காக வந்த மருத்துவ குழுவினரை பார்த்ததும் கிராம மக்கள் ஓடி ஒளிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சர்க்கார்போரத்திபதி என்ற மலைவாழ் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு பூலுவபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் தடுப்பூசி செலுத்துவதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் மருத்துவ குழுவினரை பார்த்ததும் அங்கு வசிக்கும் கிராம மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் நாங்கள் இறந்து விடுவோம் என்று கூறி அங்குமிங்கும் ஓடி ஒளிந்தனர். அதிலும் சிலர் அங்கிருந்த மரத்தின் மீது ஏறிக் கீழே இறங்க மறுத்ததோடு, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து மருத்துவ குழுவினர் கூறும் போது தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக எவ்வளவோ எடுத்துக் கூறியும் அங்குள்ள பொதுமக்கள் ஓடி ஒளிந்தனர். இதனையடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்வதன் முக்கியத்துவம் குறித்து விளக்கிய பிறகு 10 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வந்ததாக தெரிவித்துள்ளனர்.