Categories
சேலம் திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருச்சி, சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் 77 நாட்களுக்கு பிறகு தனியார் பேருந்துகள் இயக்கம்…!!

கொரோனா தொற்று பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்து முடக்கப்பட்டது.

மேலும் சுமார் 75 நாட்களுக்கு மேலாக போக்குவரத்து முடக்கப்பட்ட நிலையில் கடந்த ஒரு வார காலமாக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயங்கும் என்றும் குறிப்பிட்ட மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் 4,400 தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் தர்மராஜ் தெரிவித்திருந்தார்.

பேருந்துகளில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது, பயணிகள் முகக்கவசம் அணிய வலியுறுத்தல் உள்ளிட்ட அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து இன்று சேலத்தில் தனியார் பேருந்துகள் இயக்கம் தொடங்கியது. இன்று மட்டும் 500 தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஒவ்வொரு பேருந்திலும் 24 பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேருந்து ஓட்டுநர், நடத்துனர், பயணிகள் என அனைவரும் முகக்கவசம் அணிந்து பயணம் மேற்கொண்டனர்.

அதேபோல, கோவை மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தனியார் பேருந்து சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. கோவையில் 60% பயணிகளோடு பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவையில் இருந்து பொள்ளாச்சி மார்க்கெட் மற்றும் மேட்டுப்பாளையம் மார்கெட்டுகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

அதேபோல திருப்பூரில் இருந்து பல்லடம் மற்றும் அவிநாசி சாலை வழியாக இருமார்கத்திலும் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. சில பேருந்துகளில் மக்கள் நின்றபடி பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சில பேருந்துகளில் கட்டுப்பாடுகள் சரிவர கடைபிடிக்கப்படுகின்றனவா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதேபோல திருச்சியிலும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

Categories

Tech |