கேரள மாநிலத்தைச் சேர்ந்த சாரோன்ராஜ் என்ற மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த மாணவன் கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்த போது க்ரீஷ்மா என்ற பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் கல்லூரியில் படிக்கும்போது காதலிக்க தொடங்கியுள்ள நிலையில், க்ரிஷ்மா வீட்டில் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து உள்ளனர். ராணுவத்தில் பணிபுரியும் ஒருவருடன் க்ரீஷ்மாவுக்கு நிச்சயம் செய்யப்பட்ட நிலையில், முதல் கணவர் இறந்து விடுவதாக ஜோசியத்தில் கூறியதால் தன்னுடைய காதலனை யாருக்கும் தெரியாமல் ஒரு தேவாலயத்தில் வைத்து கிரீஷ்மா திருமணம் செய்துள்ளார்.
அதன்பின் அவரை பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா என்ற பெயரில் அழைத்துச் சென்று கொஞ்சம் கொஞ்சமாக குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். கடைசியாக கொடுத்த விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்த சாரோன் ராஜ் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உயிரிழந்த வாலிபரின் தந்தை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் க்ரிஷ்மாவை காவல்துறையினர் கைது செய்தனர்.
அதன் பிறகு கொலைக்காண ஆதாரங்களை அழித்த குற்றத்திற்காக க்ரீஷ்மாவின் தாயார் மற்றும் மாமாவையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் க்ரீஷ்மாவிடம் நடத்தும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வருகிறது. அந்த வகையில் 2 மாதத்தில் 10 முறை வாலிபரை கொலை செய்ய க்ரிஷ்மா முயற்சி செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் குமரியில் வாலிபர் மற்றும் கிரீஷ்மா சுற்றித்திரிந்த இடங்களுக்கு விசாரணை நடத்துவதற்காக காவல்துறையினர் அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.