தமிழ் திரையுலகை பொருத்தவரை கேரளா ஆந்திரா மற்றும் வடமாநிலங்களில் இருந்து வரும் நடிகைகள் தமிழ் ரசிகர்களின் மனதில் நிலை கொண்டு இருப்பது வழக்கம். ஆனால் 2002 ஆம் ஆண்டு மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி 20 ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர்களின் மனதில் தன லட்சுமியாகவும், ஜானுவாகவும் நிலைத்து நிற்கிறார் நம்ம சென்னை நடிகை திரிஷா.
2002 ஆம் ஆண்டு சூர்யா லைலா திரிஷா நடிப்பில் வெளிவந்த மௌனம் பேசியதே படத்தில் திரிஷா கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தாலும் அதற்கு முன்னதாகவே 1999 ஆம் ஆண்டு வெளியான ஜோடி திரைப்படத்தில் சிம்ரனுக்கு ஓரிரு காட்சிகளில் தோழியாக வந்துள்ளார். திரிஷா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அஜீத், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், ஜீவா, விஜய் சேதுபதி என பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.
திரிஷா நடித்த கில்லி, சாமி, விண்ணைத்தாண்டி வருவாயா, திருப்பாச்சி, உனக்கும் எனக்கும், மங்காத்தா, 96 என பல படங்கள் பிளாக்பஸ்டர் படங்களாகவே அமைந்தது 60 படங்களில் இதுவரை நடித்துள்ள த்ரிஷா 45க்கும் அதிகமான விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார்.