Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வாக்கு எண்ணும் மையத்தின் மேல் ட்ரோன் கேமரா…. யார் பறக்கவிட்டது….? ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வினர்….!!

ட்ரோன் கேமரா வாக்கு எண்ணும் மையத்திற்கு மேல் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் உள்ள தெத்தி பகுதியில் தனியார் கல்லூரி ஒன்றில் கீழ்வேளூர், வேதாரண்யம், நாகை ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. அங்கு 3 அடுக்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இந்த மையத்தின் மேல் ட்ரோன் கேமரா அரை மணி நேரமாக பறந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த திமுகவினர் அதிர்ச்சி அடைந்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்துமாறு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான பிரவீனிடம் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதில் சென்னையை சேர்ந்த குமார், பாலாஜி, சுரேஷ்குமார் ஆகிய மூன்று மாணவர்கள் விடுமுறைக்காக நாகை மாவட்டத்திற்கு வந்ததும் அவர்கள் கல்லூரிக்கு அருகே உள்ள கிராமத்தில் ட்ரோன் கேமரா பறக்கவிட்டதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் அந்த மூன்று மாணவர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்களிடம் இருந்து செல்போன்கள் மற்றும் ட்ரோன் கேமரா ஆகியவற்றை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |