கொரோனா வைரஸ் நம் வாழ்வியல் முறைகளில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
கொரோனா வைரஸ் நோயானது ஒரு கொள்ளை நோய். நம்முடைய அணுகுமுறை மற்றும் வாழ்வியலை முற்றிலும் மோசமாக புரட்டிப் போட்டு விட்டது. அதிலும் மிக முக்கியமானது இனி வரக்கூடிய காலங்களில் கூட்டமாக சேர்ந்து பணியாற்றுவது, நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது சாத்தியமில்லை.
வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும், மிக குறைவாகவே இருக்கும். உலக சுற்றுலா மேற்கொள்ள முடியாது. பக்கத்து மாநிலத்துக்கு செல்ல வேண்டுமென்றாலும் கூட கடுமையான பாதுகாப்புகளை தாண்டி செல்ல வேண்டியதிருக்கும். தனிப்பட்ட சுகாதாரம் என்பது மிக முக்கியத் தேவையாக இருக்கும். அலுவலகங்களுக்குச் செல்லும் போது மணிபர்ஸ், மொபைல்போன், ஹெல்மெட் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்வது போல வீட்டிலிருந்து கிளம்பும்போதே முக கவசம், கையுறை, சனிடைசர் உள்ளிட்டவற்றையும் சேர்த்து நம் வாழ்வின் ஒரு அங்கமாகவே பயன்படுத்தக் கூடிய சூழ்நிலை ஏற்படும்.
நெருங்கிய நண்பர்கள் உறவினர்களுடன் கைகுலுக்க முடியாது. துணிச்சலாக பயணங்கள் மேற்கொள்ள முடியாது. ஹோட்டல்களில் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ண முடியாது. வித்தியாசமான நபர்களை சந்திக்கும்போது மூன்றடி இடைவெளி விட வேண்டும்.
உதவி என்று கேட்டு வருவோர்களிடம் மூன்றடி இடைவெளி விடவேண்டிய சூழ்நிலை ஏற்படும். மன விட்டு அவர்களுக்கு உதவ முடியாது. இந்த புதிய மாற்றங்கள் அனைத்தும் பலருக்கு எரிச்சலை ஏற்படுத்தும். இருப்பினும் உடல்நிலையை பாதுகாக்க இவற்றையெல்லாம் நாம் செய்துதான் ஆகவேண்டும்.