ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற சீன அதிபரின் உதவியை நாடியதாக அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜான் போல்டன் ஒரு வெள்ளை மாளிகை நினைவுகள் என்ற தலைப்பில் எழுதிய புத்தகம் ஒன்றை அடுத்த வாரம் அதிகாரபூர்வமாக வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் புத்தகத்தின் ஒரு பகுதி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆகிய பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது.
வெளியான பகுதியில், அமெரிக்க அதிபர் டிரம்ப் 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தனிப்பட்ட முறையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் உதவுமாறு கேட்டுக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அப்புத்தகத்தில் உய்குர் முஸ்லிம்களை அதிகளவில் தடுத்து வைப்பதற்காக சீனா முகாம்களை கட்டுவதாக கடந்த வருடம் ட்ரம்பிடம் சீன அதிபர் ஜி கூறியபோது முகாம்களை கட்டி முன்னோக்கி செல்ல வேண்டும் என அதிபர் கூறினார்.
இது சரியான செயல் என்றே அவர் நினைத்தார் எனவும் அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதிபர் ட்ரம்ப் இதனை மறுத்து, “அவர் ஒரு பொய்யர்” வெள்ளை மாளிகையில் அனைவரும் ஜான் போல்டனை வெறுக்கவே செய்தனர் என கூறியுள்ளார். ஒப்பந்தங்களை ஜான் போல்டன் மீறியதாகவும், ரகசிய தகவல்களை வெளிப்படுத்துவதன் மூலம் நாட்டின் பாதுகாப்பை ஆபத்தில் தள்ளுவதாகவும் கூறி ஜான் போல்டன் எழுதிய புத்தகத்திற்கு தடை கோரி அமெரிக்க அரசு நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.