பொருளாதாரத்தின் வீழ்ச்சியை சரிசெய்ய டிரம்ப் எடுத்திருக்கும் முடிவிற்கு ஆளுநர்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்
உலக நாடுகளில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று அமெரிக்காவிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி அதிக அளவில் உயிர் பலியையும் பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நாட்டின் பொருளாதாரத்தை அதிகரிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதனை அடுத்து வரும் மாதங்களில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது பற்றியும் மூன்று கட்டங்களாக ஊரடங்கு தளர்த்துவது பற்றியும் மாநில ஆளுநருக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.
மாநிலங்கள் ஊரடங்கை படிப்படியாக தளர்த்திக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசின் உதவியுடன் அந்தந்த மாநிலத்தின் ஆளுநர் இது தொடர்பான நடைமுறைகளை மேற்கொள்ளலாம் எனவும் உறுதி அளித்துள்ளார். அவர் கூற்றின்படி நேற்று மூன்று கட்ட செயல் திட்டத்தை அறிவித்துள்ளார். இதுகுறித்து டிரம்ப் கூறியதாவது “நமது அடுத்த போர் அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீண்டும் சிறந்த முறையில் கொண்டு செல்வதே அதனால் அமெரிக்கா முற்றிலுமாக திறக்கப்பட வேண்டும். மக்களும் அதனையே விரும்புகின்றனர்.
நீண்டகாலம் ஊரடங்கு தொடர்ந்தால் மாகாணங்களில் எந்த பயனும் இருக்காது. ஊரடங்கின் காரணமாக மக்களின் உடல்நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கின்றது. இதனால் குடும்பத்தில் வன்முறைகளும், போதை பழக்கங்களும் தான் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்று நினைக்கும் அமெரிக்கர்கள் துணிச்சலாக வெளியில் வந்து வேலைக்கு செல்லலாம். அதேநேரம் சமூக விலகளையும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். அனைத்து ஆளுநர்களும் ஊரடங்கு தளர்த்துவது குறித்து விரைவில் முடிவு எடுக்க வேண்டும்.
3 கட்ட திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தை இயல்பு பாதைக்கு மீண்டும் கொண்டுவர திட்டமிட்டு உள்ளேன். இந்த மூன்று கட்டங்களிலும் மக்கள் அதிகமான சுத்தம், சமூக விலகல் சோதனை செய்தல் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடியாக தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிக்க வேண்டியது அவசியமாகும்” என கூறியுள்ளார். ஆனால் பெரும்பாலான ஆளுநர்கள் கொரோனா தொற்றின் பிடியிலிருந்து முழுமையாக விடுபடாத இக்கட்டான நிலையில் டிரம்ப் இவ்வாறு திட்டமிட்டதற்கு அதிருப்தியை தெரிவித்துள்ளனர். அதோடு பரிசோதனைகள் அதிக அளவில் தேவை என்றும் தெரிவித்துள்ளனர்.