ராய்ட்டர்ஸ் செய்தி ஊடகம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் அதிபர் டிரம்பின் செல்வாக்கு குறைந்து இருப்பது தெரியவந்துள்ளது
சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் பலவற்றிலும் பரவி ஏராளமான பாதிப்புகளை உருவாக்கி வருகின்றது. தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா. அமெரிக்காவில் மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 61 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இதனையடுத்து கொரோனா தொற்றில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை வியாட்நாம் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் உள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதோடு அந்நாட்டின் பொருளாதாரத்தில் மந்தமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஏராளமானோர் வேலை இழந்துள்ளதாகவும் இதுகுறித்து டிரம்ப் புரிந்து கொண்டாரா என்பது இன்னும் தெரியவில்லை என சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.
நாளுக்கு நாள் அதிபர் டிரம்ப் புதுப்புது யோசனைகள் கொடுத்துவருவதும் அதிகரித்து வருகின்றது. கடந்த வியாழனன்று உடலுக்குள் இருக்கும் வைரஸை கிருமி நாசினி மூலம் அழிக்கும் முயற்சியின் சாத்தியத்தை ஆராயுமாறு மருத்துவ குழுவிடம் கேட்டுள்ளார். இதற்கு கிருமிநாசினி தயாரிப்பாளர்கள் அவ்வாறு செய்ய வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பின்னர் வில்லியம் பிராயன் கருத்தை மேற்கோள்காட்டி சூரிய ஒளி மூலம் தொற்று அழிந்துவிடும் என்றால் நமது உடலில் அதிக அளவு ஒளியை செலுத்துவதன் மூலம் கொரோனா குணமடைய வாய்ப்பு இருப்பதாகவும் புற ஊதா கதிர்கள் கொண்ட அதிக சக்தி வாய்ந்த ஒளியை உடலின் உள்ளேயோ அல்லது உடலின் மேற்பரப்பிலோ செலுத்துமாறு யோசனை கூறியுள்ளார். இதற்கு மருத்துவ நிபுணர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் அதிபர் டிரம்ப் செல்வாக்கு குறைந்து கொண்டே வருகிறது. 43% அமெரிக்கர்கள் டிரம்பின் செயல்பாடுகளுக்கு ஆதரவாகவும் கொரோனா தொற்றை கையாளும் விதத்திற்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இன்று ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால் 40% பேர் மட்டுமே டிரம்புக்கு ஆதரவு எனவும் 44% பேர் ஜனநாயக வேட்பாளரான ஜோ பிடெனுக்கும் ஆதரவு என தெரிவித்துள்ளனர்.