அமெரிக்காவில் கொரோனாவால் இழந்த நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க 6 இந்தியர்கள் உட்பட்ட குழுவை அதிபர் டிரம்ப் அமைத்துள்ளார்
உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா பரவி 20 லட்சத்திற்கும் மேற்பட்டோரை பாதித்து ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரின் உயிரை பறித்துள்ளது. அவ்வகையில் அமெரிக்காவிலும் அதன் தாக்கம் அதிகளவில் இருந்தது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் பொருளாதார வீழ்ச்சியையும் சந்தித்து வருகிறது அமெரிக்கா.
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக புதிதாய் குழு ஒன்றை அமைத்துள்ளார் அதிபர் டிரம்ப். ” மாபெரும் அமெரிக்க பொருளாதார மீட்டெழுச்சி தொழில்துறை குழு” என்னும் பெயரை பெற்ற அக்குழு அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசுக்கு அறிவுரைகளை வழங்க உள்ளது.
அக்குழுவில் இந்தியாவை சேர்ந்த சுந்தர் பிச்சை, மைக்ரான் நிறுவனத்தின் சஞ்சய் மெஹ்ரோத்ரா, சத்யா நாதெல்லா, மாஸ்டர் கார்ட்டிலிருந்து அஜய் பங்கா, ஐபிஎம் நிறுவனத்தின் அரவிந்த் கிருஷ்ணா, ஆன் முகர்ஜி ஆகிய 6 பேர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.