டுவிட்டர் கணக்கு முடக்கத்தை எதிர்த்து டிரம்ப் அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் ஜோ பைடன் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டிருந்த நிலையில் வெற்றி பெற்றார். அதேசமயம் அதிபர் டிரம்ப் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டிருந்த நிலையில் தோல்வியை சந்தித்தார். ஆனால் டிரம்ப் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி தோல்வியை ஏற்க மறுப்பு தெரிவித்தார். இதன் காரணமாக டிரம்ப் ஆதரவாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்திற்குள் நுழைந்து கடந்த ஜனவரி மாதம் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதில் 5 காவல்துறை அதிகாரிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதற்கு காரணம் டிரம்ப் வன்முறையாக பேசியது தான் என்று கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இதனால் டுவிட்டர் நிறுவனமும் டிரம்ப்-ன் டுவிட்டர் கணக்கை முடக்கியது. அதன் பிறகு டுவிட்டர் நிறுவனம் டிரம்ப்-ன் டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்குவதாக அறிவிப்பு வெளியிட்டது. அதனை தொடர்ந்து பிற சமூக வலைதளங்களும் டிரம்ப்-க்கு தடை விதித்தது. இதனால் டிரம்ப் கடந்த ஜூலை மாதம் ஃபேஸ்புக், டுவிட்டர், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் டிரம்ப் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் தனது டுவிட்டர் கணக்கை மீண்டும் இயக்க உத்தரவிடவேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் டிரம்ப், டுவிட்டர் நிர்வாகம் டுவிட்டரில் தலிபான்கள் சுதந்திரமாக பதிவிட அனுமதி அளித்துள்ளது. ஆனால் அதிபராக நான் பணியாற்றியபோது எனது டுவிட்கள் போலி தகவல்களை கொண்டவை என்று கூறி முத்திரை பதித்தது என்றும் கூறியுள்ளார். மேலும் ஜனநாயகத்திற்கு எதிராக முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அரசியலை ஆக்கிரமிக்கும் வகையில் டுவிட்டர் நிறுவனம் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.