இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப் தற்போது உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கும் நிதியை நிறுத்திவிடுவோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிக அளவு கொரோனாவால் பாதிப்பை சந்தித்த நாடு அமெரிக்கா. இந்நிலையில் அதிபர் டிரம்ப் இந்தியா ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து கொடுக்காமல் இருந்தால் பின்விளைவுகளை சந்திக்க கூடும் என இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்ததோடு, உலக சுகாதார அமைப்பு கொரோனா குறித்து சரியான தகவல் அளிக்கவில்லை எனவும் சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அவர்களுக்கு வழங்கும் நிதியை நிறுத்த போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த போது ” அமெரிக்காவிடமிருந்து அதிகளவு பணத்தை பெரும் உலக சுகாதார அமைப்பு பயண தடையை விமர்சித்து தடைக்கு உடன்பட வில்லை. நிறைய சம்பவங்களில் அவர்கள் தவறாகவே பேசியுள்ளனர். அதோடு அவர்கள் சீனாவுக்கு பெரிய அளவில் ஆதரவாக செயல்படுகிறார்கள் என தோன்றுகிறது. உலக சுகாதார அமைப்பிற்கு அமெரிக்கா வழங்கும் நிதியை நிறுத்தப் போகிறோம்” என எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் பிரச்சனை நிறைந்த சூழலில் உலகம் இருக்கும் நிலையில் நிதியை நிறுத்துவது சரியான முடிவுதானா என நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது தனது கருத்தை மாற்றி நிதியை நிறுத்துவது பற்றி பரிசீலிப்போம் என டிரம்ப் கூறியுள்ளார்.