போலீசாரின் நடவடிக்கை தாமதமாக இருப்பதாக கூறி வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அமரம்பேடு பகுதியில் பவித்ரா என்பவர் வசித்து வருகிறார். இவர் அமரம்பேடு பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றபோது, அதே பகுதியில் வசித்து வரும் பாலாஜி என்பவர் ரேஷன் கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் பாலாஜி மூன்றுக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்ததால், பவித்ரா தான் ஒரு கார்டுக்கு மட்டும் பொருட்கள் வாங்கித் செல்கிறேன் என கூறியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாலாஜியிடம் பவித்ராவின் சகோதரரான வினோத் என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கோபமடைந்த இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
அதன் பிறகு அனைவரும் வீட்டிற்கு சென்ற பிறகு மங்கலம் காவல் நிலையத்தில் பவித்ரா தன்னை தகாத வார்த்தைகளால் பாலாஜி திட்டி தகராறில் ஈடுபட்டதாக அவரின் மீது புகார் அளித்தார். இதேபோல் சோமங்கலம் காவல் நிலையத்தில் பாலாஜியின் தந்தை தாமோதரன் என்பவர் பவித்ராவின் சகோதரர் வினோத் என்பவர் தங்கள் வீட்டிற்கு இரவு நேரத்தில் வந்து தகராறு செய்ததாக புகார் அளித்துள்ளார். இந்த இரு புகார்களையும் ஏற்றுக்கொண்டு வழக்கு பதிவு செய்த சோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தாமதபடுத்துவதாக கூறி சோமங்கலம் காவல் நிலையத்திற்கு வந்த வினோத் ஒரு கேனில் இருந்த டீசலை உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சோமங்கலம் போலீசார் அவரது உடல் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றிவிட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.