தொழிலாளி தனது குடும்பத்துடன் ஜப்தி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குருத்தன் கோட்டை பகுதியில் தங்கரத்தினம் என்ற தொழிலாளி வசித்து வருகிறார். இவரது தாய் ஒருவரிடம் வாங்கிய 75 ஆயிரம் ரூபாய் கடனை திருப்பிக் கொடுப்பதற்குள் அவர் இறந்துவிட்டார். இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் கடன் கொடுத்தவர் வழக்கு தொடர்ந்ததால் தங்கரத்தினத்தின் வீட்டில் உள்ள பொருட்களை ஜப்தி செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவின்படி அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் போலீசார் அவரது வீட்டில் உள்ள பொருட்களை ஜப்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கையில் ஈடுபட்ட போது, அதிர்ச்சி அடைந்த தங்கரத்தினம் தனது குடும்பத்துடன் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை தடுத்து நிறுத்தியதோடு, சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.