நாட்டின் தலைநகர் டெல்லியின் திஸ் ஹசாரி நீதிமன்றத்துக்கு கைதிகளை ஏற்றிக் கொண்டு காவலர் வாகனம் ஒன்று கடந்த 2ஆம் தேதி வந்தது.இந்த வாகனம் மீது, வழக்குரைஞர் வாகனம் ஒன்று மோதியது. இதையடுத்து காவலர்களுக்கும், வழக்குரைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட தகராறினைத் தொடர்ந்து அந்த வழக்குரைஞரை காவலர்கள் கைது செய்ய முனைந்தனர்.
அதற்கு வழக்குரைஞர் எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில் வழக்குரைஞர் தாக்கப்பட்டார். அவருக்கு ஆதரவாக வழக்குரைஞர்கள் ஒன்று கூடி, காவலர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.இதையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவிற்கு நிலைமை மோசமடைந்தது. இரு தரப்பினரும் காயம் அடைந்தனர். 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
இதுகுறித்து டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என்.படேல் தலைமையிலான அமர்வு தானாக முன்வந்து அவசர விசாரணை நடத்தி, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.பி. கார்க் தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது.மேலும் வழக்குரைஞர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க கூடாது என அறிவுறுத்தியிருந்தது. இது காவலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் டெல்லி சாகெட் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பில் இருந்த காவலர் ஒருவரை வழக்குரைஞர்கள் சூழ்ந்துக் கொண்டு கடுமையாக தாக்கினார்கள்.இது காவலர்கள் உள்பட அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து நேற்று காலை 9.30 மணிக்கு திடீரென ஆயிரக்கணக்கான போலீசார் கைகளில் பதாகைகள், கோரிக்கைகள் எழுதப்பட்ட அட்டைகளுடன் அணி அணியாக திரளத்தொடங்கினர்.அந்த பகுதியில் அமைந்த முக்கிய சாலையை அவர்கள் முடக்கினர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது காவலர்கள், “நாங்கள் சீருடையில் உள்ள மனிதர்கள், நாங்கள் குத்துகள் வாங்கும் பைகள் அல்ல; பாதுகாப்பு அளிப்பவர்களுக்கு பாதுகாப்பு தேவை, தாக்குதல் நடத்திய வழக்குரைஞர்கள் மீது நடவடிக்கை தேவை” என முழங்கினார்கள்.தொடர்ந்து பத்து மணி நேரமாக நீடித்த காவலர்கள் போராட்டம் அன்றைய தினம் மாலை முடிவுக்கு வந்தது.இந்நிலையில் மாவட்ட நீதிமன்ற பார் அசோசியேஷன்களின் ஒருங்கிணைப்புக் குழு, “நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட மூத்த அதிகாரிகளைக் காப்பாற்றும் முயற்சிகள் நடக்கிறது என குற்றஞ்சாட்டி காவல் உயர் அலுவலர்களுக்கு நோட்டீசு அளித்துள்ளது.