Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவுக்கு எதிர்ப்பு: சட்டப்பேரவையை புறக்கணித்த டிடிவி, தமிமுன்.!

ஆளுநர் உரையை புறக்கணித்து சட்டப்பேரவை கூட்டத்தொடரிலிருந்து டிடிவி தினகரன், தமிமுன் அன்சாரி வெளிநடப்புச் செய்துள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2020ஆம் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. ஆளுநர் உரையை புறக்கணித்து பிரதான எதிர்க்கட்சியான திமுக வெளிநடப்புச் செய்தது. இதேபோல் காங்கிரஸ், அமமுக, மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வெளிநடப்புச் செய்தன.

இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “அமமுக சார்பில் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளியேறியுள்ளோம். குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்ததை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மதச்சார்பற்ற நாட்டில் இஸ்லாமியர்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு கருத்தில்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்” என்றார்.

Image

மனிதநேய ஜனநாயக கட்சியும் ஆளுநர் உரையை புறக்கணித்த நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கூறியதாவது:மத்திய அரசு கொண்டுவந்துள்ள கறுப்புச் சட்டங்களான சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஆகியவற்றை தமிழ் மண்ணில் அமல்படுத்தக் கூடாது. ஜனநாயகப் பூர்வமான எதிர்ப்பை இந்திய தேசிய கொடியை ஏந்தி ஆளுநர் உரையை புறக்கணித்துள்ளோம். மேற்கு வங்கம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஓடிசா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இந்தக் கறுப்புச் சட்டத்தை இயற்றமாட்டோம். கேரளாவில் இந்தச் சட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
Thamimun ansari walks out from TN Assembly

தமிழ்நாட்டில் இந்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று சட்டப்பேரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானமும் கொடுத்துள்ளோம். இந்தச் சட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று 2014ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையில் ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார். பாஜகவின் தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி, மதச்சார்பற்ற நாட்டில் இதுபோன்ற சட்டங்களை நிறைவேற்றக்கூடாது என்றும் கூறினார். அதை அதிமுக தலைமைக்கு தற்போது நினைவூட்டுகிறோம்.

நாட்டின் ஜனநாயகம், அரசியல் சாசன சட்டம், சமூக நீதியை பாதுகாப்பதற்காக நாங்கள் செய்யும் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களுக்கு என் மீது நடவடிக்கை எடுத்தால் நாட்டின் நலனுக்காக ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். குடியுரிமை சட்டத்திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு டீ-சர்ட் அணிந்து தமிமுன் அன்சாரி போராட்டம் நடத்துகிறார். முன்னதாக, சட்டப்பேரவைக்கு செல்லும்முன் குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி முழக்கமிட்டார்.

Categories

Tech |