கொரோனா தடுப்பு பணி தற்காலிக ஊழியர்கள் நியமன முறைகேடு குறித்து அமமுக பொதுச் செயலாளர் TTV தினகரன் தமிழக அரசை கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா தடுப்பு பணியில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டதில் முறைகேடு இருந்ததாக புகார் எழுந்ததை அடுத்து அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் TTV.தினகரன் கேள்வி எழுப்பி தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அதில், கூடுதலாக மருத்துவர்கள்,செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களைத் தற்காலிகமாக நியமிப்பதற்கான திடீரென ‘ஜென்டில்மேன் ஹெச்.ஆர்’ (GENTLEMAN HR) என்ற தனியார் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் போட்டதாக தகவல்கள் வெளியாயின.
அந்த நிறுவனமோ, ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு மாதிரி தமது பெயரைப் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. விளம்பர அறிவிப்பு, பணிநியமனத்திற்கான ஆணை, நிறுவனத்தைப் பற்றிய தகவல் குறிப்பேடு என ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமாக பெயரை அந்த தனியார் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. மருத்துவப் பணியாளர் தேர்வுவாரியம் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான பணியை, முன் பின் தெரியாத ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான முடிவை எடுத்தது யார்? அனுபவம் இல்லாத நிறுவனம் தகுதியில்லாதவர்களை நியமித்திருந்தால் அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு யார் பொறுப்பேற்பது?
மருத்துவப்பணிக்கான ஊழியர்களைத் தேர்வு செய்வதில் போகிற போக்கில் தவறு நிகழ்ந்தது எப்படி?இதற்குப்பின்னணியில் இருப்பவர்கள் யார்?RAPID TEST KIT-ல் ஆரம்பித்து,தற்போது மருத்துவப்பணியாளர் நியமனம் வரை மனசாட்சியின்றி ஆட்சியாளர்கள் புகுந்து விளையாடுவதாக எழும் புகாருக்கு விளக்கம் என்ன? மக்களின் நலன் கருதி சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து இது பற்றி விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று தமிழக அரசை TTV வலியுறுத்தியுள்ளார்.