பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவில்பட்டி பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மஞ்சள் குலைகள் நன்கு வளர்ந்து தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளன.
தமிழ்நாட்டில் தைப்பொங்கல் பண்டிகையானது வருகின்ற 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையன்று ஆண்டுதோறும் உழைத்த விவசாயிகள் தங்களது விளை பொருட்களை இறைவனுக்கு படைத்து, தனது குடும்பத்தினருடன் புதுப்பானையில் பொங்கலிட்டு இறைவனுக்கு நன்றி தெரிவிப்பர். அந்த பொங்கல் பண்டிகையில் முக்கிய இடம் பெறும் பொருட்களில் ஒன்று மஞ்சள் குலைகள். எனவே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவில்பட்டி மந்தித்தோப்பு பகுதியில் சில விவசாயிகள் மஞ்சள் பயிரிட்டுள்ளனர். அதோடு 6 மாத பயிரான இந்த மஞ்சள் குலைகளுக்கு வாரம் ஒரு முறை கிணற்று பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சி விவசாயிகள் அதற்கு நன்கு உரமிட்டு வளர்த்தனர்.
இப்போது நன்கு வளர்ச்சி அடைந்த மஞ்சள் குலைகள் அறுவடைக்கு தயாராகி விட்டது. இதுகுறித்து மாந்தோப்பு விவசாயிகள் கூறும்போது, ஒரு ஏக்கருக்கு ரூபாய் 30 ஆயிரம் வரை செலவு செய்து இந்த மஞ்சளை பயிரிட்டுள்ளதாக கூறுகின்றனர். இங்கு வளர்க்கப்பட்ட இந்த மஞ்சள் குலைகள் விரைவில் அறுவடை செய்யப்பட்டு கோவில்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படும். இதனையடுத்து பொங்கல் பண்டிகையில் முக்கிய இடம்பெறும் இந்த மஞ்சள் குலை ரூபாய் 20 முதல் ரூபாய் 30 வரை விற்பனை செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் அடுத்த ஆண்டிலாவது கரும்புடன் மஞ்சளையும் சேர்த்து ரேஷன் கடைகளில் அரசு வழங்கினால் விவசாயிகளுக்கு போதிய வருமானம் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.