காடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மஞ்சள் மூட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள முத்துப் பேட்டையில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக மஞ்சள் கடத்தப்படுவதாக கியூ பிராஞ்ச் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின்படி துணை சூப்பிரண்டு சிவசங்கர், இன்ஸ்பெக்டர் அருண்பிரசாத், சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் ஆகியோரது தலைமையிலான காவல்துறையினர் முத்துப்பேட்டை கடலோர காடுகளில் சோதனையை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சோதனையின்போது சுமார் 360 கிலோ மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மஞ்சள் மூட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த மஞ்சள் மூட்டைகளின் மதிப்பு சுமார் 3 லட்சம் இருக்குமென கருதப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த முத்துப்பேட்டை காவல்துறையினர் மஞ்சள் மூட்டைகளை யார் பதுக்கி வைத்தது? இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக மஞ்சள் மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.