தூத்துக்குடியில் வீட்டில் நிறுத்தி இருந்த ரூ.8,00,000 மதிப்புள்ள கார், வீட்டு வரவேற்பு அறையில் இருந்த டிவி ஆகியவற்றை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி பகுதியை சேர்ந்த தொழிலதிபர் குணசேகரன். இவரின் மனைவி அதே பகுதி தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவில் பணிபுரிந்து வந்த தன் மகனைப் பார்ப்பதற்காக குணசேகரன் தனது குடும்பத்தாருடன் கடந்த 8ஆம் தேதி அமெரிக்காவுக்குச் சென்றார். தூத்துக்குடியில் உள்ள தனது வீட்டை கவனித்துக் கொள்வதற்கென 2 நபரை வேலைக்கு அவர் நியமனம் செய்திருந்தார்.
இவ்வாறு இருக்கையில் மாலையில் பல்புகளை எரியச் செய்வதற்காக வேலையாட்கள் சென்றனர், அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், வீட்டில் நிறுத்தி இருந்த ரூ8,00,000 மதிப்புள்ள கார், வரவேற்பு அறையில் வைத்திருந்த டிவி ஆகியவை திருடப்பட்டு இருந்ததோடு படுக்கை அறையில் இருந்த பொருட்களும் சிதறிக் கிடந்து இருந்தன. பின் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாளமுத்து நகர் காவல்துறையினர்,
சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அதில், தற்போதைய சூழ்நிலையில் கார், டிவி உள்ளிட்டவை மட்டும் திருடபட்டுள்ளன. இருப்பினும் அமெரிக்காவில் இருந்து குடும்பத்தினர் திரும்பி வந்தபிறகே என்னென்ன பொருள்கள் திருடப்பட்டுள்ளன என்பது குறித்த முழு தகவல் தெரியவரும் என்றனர். இதனை தொடர்ந்து, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் தடயங்கள் சேகரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தத் துணிச்சலான திருட்டு சம்பவம் குறித்த விசாரணையை காவல்துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.