டியூஷன் ஆசிரியர் மர்மமான முறையில் கத்தியால் குத்தி இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை கே.டி.சி நகர் பகுதியில் பிச்சை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உஷா என்று மனைவி இருந்துள்ளார். இவர் பட்டப்படிப்பு படித்து வரும் மாணவிகளுக்கு டியூஷன் எடுத்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நீனா, ரீனா என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில் நீனா இன்ஜினியரிங்கும், ரீனா பட்டப்படிப்பும் படித்து முடித்துள்ளனர். மேலும் கோயில் பிச்சை வெளியூரில் வசித்து வருவதால் உஷா தனது இரண்டு மகள்களை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் எந்த பொருட்கள் வாங்க வேண்டும் என்றாலும் தனது மகள்களை அனுப்பாமல் தானே வெளியில் சென்று வாங்கி வருவார்.
ஆனால் எப்போதும் உஷா வீடு பூட்டிய நிலையில் இருக்கும். இந்நிலையில் உஷா வீட்டில் அலறும் சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த அருகிலுள்ளவர்கள் உஷாவின் வீட்டின் முன் திரண்டு கதவை திறக்க முயன்றனர். ஆனால் உள்புறம் பூட்டி இருந்ததால் கதவை திறக்க இயலவில்லை. இதுகுறித்து அருகிலுள்ளவர்கள் பாளையங்கோட்டை தாலுகா காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது உஷா கம்பியால் அடித்தும், கத்தியால் சரமாரியாக குத்தியும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.
அதன்பின் காவல்துறையினர் உஷாவின் உடலை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவர்களது மகள்களான நீனா, ரீனா ஆகிய இருவரும் தனது தாய் இறந்து கிடந்தது கூட தெரியாமல் பேசியும், சிரித்தும், பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டும் இருந்தனர். அவர்களை காவல்துறையினர் பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று இருவரிடமும் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் உஷாவின் மூத்த மகளான நீனா அவரை கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் தரப்பில் யூகிக்கின்றனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் உஷாவின் இரண்டு மகள்களிடம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.