Categories
அரசியல் மாநில செய்திகள்

தொலைக்காட்சி பெட்டிகள் உடைக்கப்படும்..? கொந்தளித்த ஸ்டாலின்.!

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒருமைப்பாடு எனும் ஆலமரத்தை, இந்தி – சமஸ்கிருதத் திணிப்பு எனும் கோடரி கொண்டு பிளக்கும் பிற்போக்கான செயல்பாட்டை இனியாவது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உடனடியாக நிறுத்திட வேண்டும் என்று, திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள செம்மொழியாம் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளுக்கும் சமமான தகுதியையும், ஏற்றத்தாழ்வற்ற வளர்ச்சியையும் அளித்து, பன்முகத்தன்மை கொண்ட நாட்டின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பில் உள்ளது இந்திய ஒன்றிய அரசு.

அதற்கு மாறாக, மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நாளிலிருந்தே இந்தி – சமஸ்கிருதத் திணிப்பை மட்டுமே மேற்கொண்டு, மற்ற மொழிகள் மீது ஆதிக்கம் செலுத்தி, ஒருமைப்பாட்டைக் குலைக்கும் நடவடிக்கைகளை அனைத்து மட்டத்திலும் மேற்கொண்டு வருகிறது. தற்போது, நாள்தோறும் சமஸ்கிருத செய்தித் தொகுப்பைத் தமிழின் பொதிகைத் தொலைக்காட்சியிலும், பிற மாநில மொழித் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்ப வேண்டும் என்று மண்டலத் தொலைக்காட்சி (தூர்தர்ஷன்) நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருப்பது, மொழி ஆதிக்கத்தின் ஒளி – ஒலி வடிவமாகும்.

அதுபோலவே, வாரந்தோறும் ஒரு சமஸ்கிருதச் செய்தித் தொகுப்பையும் மாநில மொழித் தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப, மத்திய அரசின் பிரசார்பாரதி நிறுவனத்தின் கீழ் செயல்படும் தூர்தர்ஷன் தலைமை அலுவலகத்திலிருந்து அனைத்து மண்டலத் தொலைக்காட்சி நிலைய அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 7.15 மணி முதல் 7.30 மணி வரை டெல்லி தூர்தர்ஷன் ஒளிபரப்பும் 15 நிமிட சமஸ்கிருதச் செய்தி அறிக்கையை அதே நேரத்திலோ, அல்லது அடுத்த அரை மணி நேரத்திலோ மாநில மொழி அலைவரிசைகளிலும் ஒளிபரப்ப வேண்டும் என்கிறது இந்தச் சுற்றறிக்கை.

மேலும், வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் வாராந்திரச் செய்தித் தொகுப்பையும் மாநில மொழித் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப வேண்டும் என இந்தச் சுற்றறிக்கை வலியுறுத்துகிறது. தமிழ் மற்றும் பிற மாநில மொழிகளுக்கான தூர்தர்ஷன் அலைவரிசையில் அந்தந்த மாநிலச் செய்திகள் அம்மாநில மக்களின் தாய்மொழியில் ஒளிபரப்பாகின்றன. தேசிய அளவிலான செய்திகள் ஆங்கிலத்தில் விரிவாக ஒளிபரப்பாகின்றன.

இந்நிலையில், இந்தியாவில் 15 ஆயிரம் பேர் அளவிற்கே பேசப்படும் – ‘உலக வழக்கழிந்த’ சமஸ்கிருத மொழியிலான செய்தி அறிக்கையை 8 கோடிக்கும் அதிகமான தமிழ் பேசும் மக்களிடமும், அதுபோலவே பல கோடி அளவிலான இந்தியாவின் பிற மொழி பேசும் மக்களிடமும் திட்டமிட்டுத் திணிப்பது, அவரவர் தாய்மொழி மீது – மொழி சார்ந்த தேசிய இனத்தின் மீது, தகவல் தொழில்நுட்பத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்ற பகிரங்கப் பண்பாட்டுப் படையெடுப்பாகும்.

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒருமைப்பாடு எனும் ஆலமரத்தை, இந்தி – சமஸ்கிருதத் திணிப்பு எனும் கோடரி கொண்டு பிளக்கும் பிற்போக்கான செயல்பாட்டை இனியாவது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உடனடியாக நிறுத்திட வேண்டும். செய்தி அறிக்கைகளிலும் பிற நிகழ்ச்சிகளிலும் இந்தி மொழித் திணிக்கப்பட்டபோது, தொலைக்காட்சிப் பெட்டிகளை உடைத்து எதிர்ப்புணர்வை வெளிப்படுத்திய இயக்கம் திமுக. சமஸ்கிருதத் திணிப்பைத் திரும்பப் பெறாவிட்டால் உடையப்போவது தொலைக்காட்சிப் பெட்டிகள் அல்ல, தாய்மொழியை உயிரெனக் கருதும் மக்களின் பங்கேற்புடன், மத்தியில் ஆட்சி செய்வோரின் ஆணவப் போக்கும் – அதிகார மமதையும்தான் என திமுக எச்சரிக்கிறது” என்று அந்த அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |