தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் கோரிக்கையை நிறைவேற்றி அசத்தியுள்ளார்.
சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்சி பகுதியிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் நாளை முதல் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவையான மளிகை பொருட்களை வாங்குவதற்கு கடை வீதிகளில் கூடினர். பல பகுதிகளில் சமூக விலகல் மீறப்பட்டுள்ளது என்றெல்லாம் புகார்கள் எழுந்தன.
இன்று பிற்பகல் 1 மணியோடு கடைகளை அடைக்கப்படும் அதற்குள் 4 நாட்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி விட வேண்டும் என்பதால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் கூட ஏற்பட்டது. இதனையடுத்து தமிழக எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், பல இடங்களுக்கு 26ம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கால் இன்று கடைகளில் மக்கள் கூட வாய்ப்புள்ளது. நெரிசலைத் தவிர்க்கும் வகையில், இன்று மட்டும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டித்து, மக்கள், தனிமனித விலகலுடன் பொருட்களை வாங்கிட உரிய ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தார்.
பல இடங்களுக்கு 26ம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கால் இன்று கடைகளில் மக்கள் கூட வாய்ப்புள்ளது.
நெரிசலைத் தவிர்க்கும் வகையில், இன்று மட்டும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டித்து, மக்கள், தனிமனித விலகலுடன் பொருட்களை வாங்கிட உரிய ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்.
— M.K.Stalin (@mkstalin) April 25, 2020
இதனையடுத்து தமிழக முதல்வர் முதல்வர் சார்பிலும் இது குறித்த ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூ மாநகராட்சி பகுதியிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் 3 மணி வரை செயல்படும் என்ற விரிவான உத்தரவை முதல்வர் பிறப்பித்துள்ளார்.
அதேபோல பொதுமக்களை பொருட்களை வாங்கிச் செல்லும்போது சமூக இடைவெளியை பின்பற்றி, முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்வதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா விஷயத்தில் தமிழக அரசு நல்ல முறையில் செயல்படுகின்றது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணமாக பார்க்கப்படுகின்றது. தேவையான அடிப்படை கோரிக்கையை எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் முன்வைத்ததுமே தமிழக அரசும் அதே போல ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
மக்களுக்காக இரண்டு கட்சிகளும் செயல்படுவது பாராட்டப்படவேண்டிய விஷயம். மொத்தத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் ரெண்டுபேருமே கலக்கிட்டாங்க என்றால் மிகையாகாது.