தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் வைத்து 2 பேருக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இதனைடுத்து நயன் மற்றும் விக்கி தம்பதிக்கு சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் அறிவித்தார். இதனால் நயன் மற்றும் விக்கி தம்பதிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்தாலும், திருமணம் ஆகி 4 மாதத்தில் எப்படி குழந்தை பிறந்தது என்ற கேள்வி எழுந்ததால், தற்போது இரட்டை குழந்தை விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
இதன் காரணமாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் மீது உரிய முறையில் விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அண்மையில் அறிவித்தார். அதோடு ஒரு தம்பதிக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆன பிறகு தான் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் கூறினார். அதுமட்டுமின்றி கடந்த ஜனவரி மாதமே மத்திய அரசு இந்தியாவில் வாடகை தாய் முறையை ரத்து செய்துள்ளது. இப்படிப்பட்ட பல்வேறு காரணங்களுக்காக தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியிடம் விசாரணை நடத்துவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் நயன்தாராவுக்கு குழந்தை பிறந்த மருத்துவமனை மீது இணை இயக்குனர் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த விசாரணையின் போது தமிழகத்தில் தான் குழந்தை பிறந்ததா அல்லது வெளிநாடுகளில் ஏதேனும் மருத்துவ மனையில் குழந்தை பிறந்ததா குழந்தை பிறப்புக்கு உரிய முறையில் சட்டங்கள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனை தொடர்பான விசாரணை முடிந்த பிறகு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியிடம் விசாரணை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கர்ப்ப காலத்தின் போது தாய்-சேய் உடல்நலத்தை கவனிப்பதற்கு பிக்மி வரிசை எண்ணை நயன்தாரா பெறவில்லை என்று கூறப்படுவதால், நயன் மற்றும் விக்கி தம்பதி மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.