உலகின் நம்பர்-1 பணக்காரர் எலான்மஸ்க் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கி இருக்கிறார். இதையடுத்து டுவிட்டர் நிறுவனத்தின் உயரதிகாரிகள் நீக்கம், நிர்வாகக்குழு கூண்டோடு கலைப்பு, டுவிட்டர் பயனாளர்களின் புளுடிக்கிற்கு கட்டணம் போன்ற நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். இதற்கிடையில் டுவிட்டரில் ஊழியர்களை குறைக்க எலான்மஸ்க் முடிவுசெய்து அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவும், பணிநீக்கம் செய்ய வேண்டிய ஊழியர்களின் பட்டியலை தயாரிக்குமாறும் மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் டுவிட்டரில் 50 % ஊழியர்களை நீக்கம் செய்ய எலான்மஸ்க் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
செலவுகளை குறைக்க அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும், பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு 60 நாட்கள் மதிப்புள்ள பணிநீக்க ஊதியம் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. டுவிட்டரில் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மெமோவின் அடிப்படையில், எந்தெந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றனர் என்ற விவரத்தை, டுவிட்டர் நிர்வாகம் தன் ஊழியர்களுக்கு இன்று காலை மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கும் என தகவல் வெளியாகியது. இருப்பினும் எத்தனை ஊழியர்கள் வேலை இழப்பார்கள் என்பதை மெமோவில் விவரிக்கவில்லை. அத்துடன் டுவிட்டரின் அனைத்து அலுவலகங்களும் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.