டுவிட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சுமார் 3 ஆயிரத்து 500 ஊழியர்களை எலான்மஸ்க் சென்ற வாரம் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து வார இறுதியில் மேலும் பல ஆயிரம் ஊழியர்களை டுவிட்டரிலிருந்து பணிநீக்கம் செய்வதாக எலான்மஸ்க் அறிவித்தார். பணிநீக்கம் குறித்த முழு விபரங்களை டுவிட்டர் இதுவரையிலும் வெளியிடவில்லை. இந்நிலையில் செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவல்களில் எலான்மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த ஒப்பந்த ஊழியர்களில் பல பேரை பணிநீக்கம் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
2ஆம் கட்ட நடவடிக்கையில் 4 ஆயிரத்து 400-ல் இருந்து அதிகபட்சமாக 5 ஆயிரத்து 500 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்று கூறப்படுகிறது. இந்த முறை பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு எவ்விதமான தகவலோ (அ) அறிவிப்போ முன்கூட்டியே வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. ஒப்பந்த ஊழியர்களில் பல பேர் திடீரென்று பணிநீக்கம் செய்யப்பட்டனர் என தகவல் வெளியாகி இருக்கிறது. பணிநீக்கம் செய்வதற்கு முன்னதாக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அலுவல்பூர்வ மின் அஞ்சல் மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் நிறுத்தப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
டுவிட்டரில் ஊழியர்களை பணியமர்த்த ஒப்பந்தம் எடுத்து இருந்த நிறுவனத்திற்கும் பணிநீக்கம் குறித்த மின்னஞ்சல் எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் கடைசி நேரத்தில் அனுப்பப்பட்டதாக கூறுப்படுகிறது. இத்துடன் பணிநீக்கம் டுவிட்டர் நிறுவனத்தின் சேமிப்பு மற்றும் மறுமதிப்பீடு நடவடிக்கையின் அங்கமாக நடத்தப்பட்டதாக மின் அஞ்சலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டவர்களின் கடைசி பணி நாள் நவம்பர் 14 என குறிப்பிடப்பட்டு உள்ளது.