ட்விட்டரில் சீனாவுக்கு ஆதரவாக ட்வீட் பதிவு செய்தவர்களின் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது
சீன அரசுக்கு ஆதரவாகவும் ஹாங்காங் போராட்டம் குறித்தும், கொரோனா குறித்தும் தவறான தகவல்களை பரப்பிய குற்றத்திற்காக ட்விட்டரில் இருந்து 1,76,000 கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. அதேபோன்று 23,750 பிரதான ட்விட்டர் கணக்குகளும் அதில் பதிவிடப்படும் ட்விட்களை ரீட்விட் செய்யும். 150000 கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. 23750 ட்விட்டர் கணக்குகள் மற்றும் அதன் ட்விட்களை பகுப்பாய்வு செய்த ஆஸ்திரேலியா ஸ்ட்ராட்டஜி பாலிசி இன்ஸ்டியூட் மற்றும் அமெரிக்க ஸ்டான்போர்ட் இணைய ஆய்வகம் இதுகுறித்து கூறும்போது முடக்கப்பட்ட ட்விட்டர் கணக்குகளில் 78 சதவீத கணக்குகளுக்கு பின்தொடர்பவர்கள் இல்லை.பின்தொடர்பவர்கள் இருக்கும் கணக்குகளில் 8 ற்கு மேல் பின்தொடர்பவர்கள் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.
சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹுவா சுனிங், சீன அரசாங்கத்திற்கு ஆதரவு தொடர்பான ட்விட்டர் கணக்குகளை முடக்கியது குறித்துப் பேசியபோது போலி தகவல்களை ட்விட்டர் குறைக்க விரும்பினால் முதலில் சீனாவை அவதூராக குறிப்பிட்டு பதிவுசெய்யும் ட்விட்டர் கணக்கை மூட வேண்டும் எனக் கூறினார். தவறான தகவல்களால் அதிகளவில் சீனாதான் பாதிக்கப்படுவதாகவும் பல தளங்களில் சீனா குறித்து தவறான புரிதல்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார். தவறான தகவல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் துருக்கி அரசாங்கத்துடன் தொடர்புடைய 7,340 கணக்குகளையும், ரஷ்ய நாட்டிற்கு தொடர்புடைய 1,152 கணக்குகளையும் ட்விட்டர் நிறுவனம் நீக்கியது குறிப்பிடத்தக்கது.