தம்பதியை கொலை செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அல்லிநகரம் கிராமத்தில் பெரியசாமி – அறிவழகி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் வீட்டிற்கு கடந்த 8 ஆம் தேதியன்று மர்ம கும்பல் நுழைந்து இருவரையும் கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 5 தனிப்படைகள் அமைத்து, பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் உசேன் கிராமத்தில் வசிக்கும் மணிகண்டன் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் வசிக்கும் சத்யா ஆகிய இருவரையும் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை அடுத்து முக்கியமான 4 குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் அந்த முக்கிய குற்றவாளிகளை பிடித்து விசாரணை நடத்தினால்தான் இந்த இரட்டை கொலைகான காரணமும், எவ்வளவு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார்கள் என்ற விவரமும் தெரியவரும் என காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.