சிவகங்கை மாவட்டம் கல்குவாரியில் குளிக்கச் சென்ற இடத்தில் அண்ணன் மற்றும் தங்கை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே இருக்கின்ற அரளிப்பட்டி முத்தரையர் காலணியில் பாண்டி முருகன் (35) என்பவர் வசித்துவருகிறார். இவர் மலேசியாவில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். இவரது மனைவி இந்திரா (31). இவர்களது மகன் சின்னப்பாண்டி என்ற 11 வயது சிறுவன் ஆறாம் வகுப்பும், மகள் சுபிக்ஷா என்ற 8 வயது சிறுமி மூன்றாம் வகுப்பும் அங்கு இருக்கின்ற அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இந்திராவின் அக்காள் மகள் பாண்டி மீனா (23) என்பவர் அருகில் இருக்கின்ற வண்ணான் மலையடி என்ற பகுதியில் உள்ள கல்வாரிக்கு குளிப்பதற்காக சென்றிருக்கிறார். அப்போது அவர் சின்னப்பாண்டி மற்றும் சுபிக்ஷா ஆகிய இருவரையும் துணைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்தக் கல் குவாரியில் 30 அடி ஆழத்திற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது.அதில் பாண்டி மீனா குளித்துக் கொண்டு இருந்த போது சிறுவர்கள் இருவரும் அருகில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
இந்தநிலையில் சிறுவர்கள் இருவரையும் திடீரென காணவில்லை.இதனைத் தொடர்ந்து பாண்டி மீனா வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளார்.. ஆனால் சிறுவர்கள் அங்கும் இல்லாத காரணத்தால் உறவினர்கள் அனைவரும் கல்வாரிக்கு மீண்டும் சென்று குழந்தைகளை தேடியுள்ளனர். அப்போது குழந்தைகள் இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து கிடந்தனர்..
பின்னர் குழந்தைகளின் உடல்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர். குழந்தைகளின் உடலை கண்டு தாய் இந்திரா மற்றும் உறவினர்கள் அனைவரும் கதறி அழுதார்கள். இதுபற்றி தகவல் அறிந்த எஸ்.வி.மங்கலம் இன்ஸ்பெக்டர் அழகர் சம்பவ இடத்திற்கு விரைந்து குழந்தைகளின் உடல்களை மீட்டு சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.