Categories
கிரிக்கெட் விளையாட்டு

என்னங்கடா இது ….. ”ஒரே நாளில் இரு ஹாட்ரிக்” பிக் பாஷ் அலப்பறைகள்!

 பிக் பாஷ் டி20 லீக் தொடரில் ஒரே நாளில் நடந்த இரு போட்டிகளிலும், ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் பிக் பாஷ் லீக் தொடரில் நாளுக்கு நாள் பரபரப்பு எகிறிக்கொண்டே போகிறது. இரு நாட்களுக்கு முன்னதாக டாம் பாண்டன் 6 பந்துகளில் 5 சிக்சர்கள் அடித்து அசத்தினார்.

இதையடுத்து இன்று நடந்த அடுத்தடுத்தப் போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இன்று நடந்த முதல் போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணியை எதிர்த்து அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி ஆடியது. இதில் முதலில் பேட்டிங் செய்த அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து சிட்னி சிக்சர்ஸ் களமிறங்கியது. இந்த அணியின் பேட்டிங்கின்போது, 10ஆவது ஓவரை ரஷீத் கான் வீசினார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் எல்பிடபில்யூ முறையில் ஜேம்ஸ் வின்ஸ் 27 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த ஜாக் எட்வர்ட்ஸ் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். இதையடுத்து 13ஆவது ஓவரை வீச ரஷீத் கான் அழைக்கப்பட, ஹாட்ரிக் விக்கெட் எடுப்பதற்கான வாய்ப்பு அமைந்தது. அந்த ஓவரின் முதல் பந்தில் சில்க் போல்டாகி வெளியேற, ரஷீத் கான் ஹாட்ரிக் சாதனைப் படைத்து அசத்தினார்.

இதேபோல் இன்று நடந்த இரண்டாவது போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை எதிர்த்து சிட்னி தண்டர்ஸ் அணி விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய சிட்னி தண்டர்ஸ் அணி 19 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரை அந்த அணியின் ஹாரிஸ் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் கில்க்ஸ் 41 ரன்களில் ஆட்டமிழக்க, மூன்றாவது பந்தில் ஃபெர்குசன் 35 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனால் அடுத்த பந்தில் ஹாட்ரிக் விக்கெட் எடுப்பதற்கான வாய்ப்பு ஹாரிஸ்க்கு கிடைத்தது. இதையடுத்து வீசிய நான்காவது பந்தில் டேனியல் சாம்ஸ் எல்பிடல்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேற, ஹாரிஸ் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

ஒரே நாளில் நடந்த இரு போட்டிகளிலும் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். இதனால் இன்று வீழ்த்தப்பட்ட ஹாட்ரிக் விக்கெட்டுகளின் காணொலி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Categories

Tech |