போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு இங்கிலாந்தில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபை சேர்ந்தவர்களான மன்ஜிந்தர் சிங் தாக்கர் மற்றும் தவிந்தர் சிங் தாக்கர் ஆகிய இருவரும் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பகுதியில் குற்றவாளிகளுடன் இணைந்து பல மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய போதைப் பொருட்களை கோழி இறைச்சியுடன் சேர்த்து மறைமுகமாக நெதர்லாந்தில் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சகோதரர்களான இவர்கள் இருவரும் வாசிம் உசேன் மற்றும் நஸ்ரத் ஹூசேன் கடத்தல் கும்பலுடன் சேர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டதை உறுதி செய்த பர்மிங்ஹாம் கிரவுன் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
சகோதரர்கள் இருவருக்கும் 44 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளன. நெதர்லாந்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கோழி இறைச்சியுடன் மறைமுகமாக வைத்து கோகய்ன், ஹெராயின் போன்ற போதைப்பொருட்களை அவர்கள் கடத்தியதாக நெதர்லாந்து குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.