காய்கறி விற்பது போல் நடித்து 2 பேர் மது பாட்டில்களை விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, வாகனங்களின் மூலம் மட்டுமே காய்கறிகளை விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் சென்னை மாவட்டத்திலுள்ள கொடுங்கையூர், எருக்கஞ்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காய்கறி விற்பது போல் நடித்து சிலர் மினி வேனில் மதுபாட்டில்களை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கொடுங்கையூர் காவல் துறையினர் அப்பகுதியில் சுற்றித் திரிந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
அப்போது அந்த வேனில் மதுபாட்டில்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து மினி வேனில் இருந்தவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது, அவர்கள் மாதவரம் பகுதியில் வசிக்கும் மணிகண்டன் மற்றும் சுதர்சன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் ஆந்திராவிலிருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து காய்கறி விற்பது போல் நடித்து, அதனை அப்பகுதியில் ரகசியமாக விற்பனை செய்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் 2 வாலிபர்களையும் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த 300 மது பாட்டில்கள் மற்றும் மினிவேன் போன்றவற்றை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.