விருகம்பாக்கம் காந்தி நகரைச் சேர்ந்தவர் சங்கர். தச்சுவேலை செய்துவரும் இவர், தனது முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்துவந்தார். இதற்கிடையே, சங்கர் இரண்டு மாதங்கள் தச்சுவேலை காரணமாக வெளியூர் சென்று வேலை முடித்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அவரது மனைவி கழுத்தில் அணிந்திருந்த செயின் இல்லாத காரணத்தினால் எங்கே என்று கேட்டுள்ளார்.
அதற்கு, ஹரிஸ் குமார் என்ற இளைஞருடன் தான் பழகிவந்ததையும், அடுக்கடி இருவரும் தனிமையில் சந்தித்துக்கொண்டதையும் சங்கரிடம் அவரது மனைவி ஒப்புக்கொண்டுள்ளார். உணவில் மயக்க மருந்து கொடுத்து, பாலியல் வன்புணர்வு செய்து, அதனை வீடியோ எடுத்ததாகவும் அதைக்காட்டி பலமுறை ஹரிஸ் குமார், தன் நண்பர் ரமேஷ் குமாருடன் சேர்ந்து மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
இதற்கிடையே, அப்பெண் கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் நகை, பணத்தையும் ஏமாற்றி மிரட்டி வாங்கிச் சென்றுள்ளனர். இதுகுறித்து, விருகம்பாக்கம் போலீசாரிடம் அப்பெண்ணின் கணவர் சங்கர் புகார் அளித்துள்ளார். ஆனால், அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே கடந்த 11ஆம் தேதி சங்கர் தி.நகர் காவல் துணை ஆணையரை சந்தித்து புகார் அளித்ததன் பேரில், வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பெண்ணை அவரது அனுமதியின்றி படம் எடுத்து மிரட்டி, நகைகளை பறித்த ஹரிஸ் குமார், அவரது நண்பர் ரமேஷ் குமார் ஆகியோரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.