கனடாவில் “ஒமிக்ரான்” வைரஸ் பாதிப்பு இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று கனடா அரசு புதிய வகை “ஒமிக்ரான்” கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 7 ஆப்பிரிக்க நாடுகளுடனான பயணத்திற்கு தடை விதித்தது. ஆனால் நைஜீரியா நாடு அந்த பயண தடையில் இடம்பெறவில்லை. இந்த நிலையில் கனடாவில் புதியவகை ஒமிக்ரான் பாதிப்பு 2 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் இருவரும் நைஜீரியாவுக்கு சென்று திரும்பி வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டதோடு அவர்களுடன் நெருக்கத்தில் இருந்தவர்களின் தகவல்களை பொது சுகாதார அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய கனடா சுகாதார அமைச்சர் ஜீன்-யவ்ஸ் டுக்லோஸ், கனடாவில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டதையடுத்து சோதனை தொடர்புகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையே குவைத், சவுதி அரேபியா, ஓமன் உள்ளிட்ட நாடுகளும் ஒமிக்ரான் பரவல் காரணமாக ஜிம்பாப்வே, போட்ஸ்வானா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 10-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயண தடையை விதித்துள்ளது.