பிரித்தானியாவில் இரண்டு பேர் அரிய வகை நோயான குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள வேல்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் குரங்கு அம்மை நோயால் இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் பொது சுகாதாரத்துறையான PHW அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட இருவரும் வெளிநாட்டிற்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் இருவரையும் பப்ளிக் ஹெல்த் இங்கிலாந்து மற்றும் PHW ஆகிய இரண்டும் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட இரண்டு பேரும் இங்கிலாந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குரங்கு அம்மை நோயானது மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்திய நாடுகளில் அதிகமாக பதிவாகியுள்ளதாகவும், MonkeyPox என்ற வைரசால் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. முதன்முதலில் இந்த குரங்கு அம்மை நோய் செப்டம்பர் 2018-ஆம் ஆண்டில் பிரித்தானியாவில் 3 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. அதன்பின்பு நான்காவதாக டிசம்பர் 2019-ம் ஆண்டில் ஒருவருக்கு பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
ஆனால் இந்த நோயானது ஆரோக்கியத்தில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது. மேலும் தசை வலி, காய்ச்சல், வீங்கிய நிணநீர், முதுகு வலி, தலைவலி, சோர்வு, குளிர் ஆகியவை இந்த நோய்க்கான அறிகுறிகளாக கூறப்படுகின்றன. இதையடுத்து இந்த நோயால் அரிப்பு மற்றும் உடலில் கொப்பளம் போன்றவை தென்படலாம் என்று கூறப்படுகிறது. அதேசமயம் இந்த வைரஸ் ஆபத்தான ஒன்றாகவும், பெரியம்மை நோயை போன்றது என்றும் கருதப்படுகிறது.
மேலும் இந்த நோய் மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிராமப்புற பகுதிகளில் பதிவாகியுள்ளதாகவும், நைஜீரியாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு குரங்கு அம்மை நோயானது அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. இந்த நோய் அமெரிக்காவில் கடந்த 2003-ஆம் ஆண்டு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.