ஜம்மு காஷ்மீரில் கொரோனா வைரஸுக்கான தீவிர அறிகுறியுடன் இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று, தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல், தற்போது கொரோனா வைரஸால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. சீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,042-ல் இருந்து 3,300ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,552-ல் இருந்து 80,711 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 98,192 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது.
இதனால் டெல்லியில் பல்வேறு அரசு ஊழியர்கள் பயோமெட்ரிக் வருகை பதிவிற்கு தடை மற்றும் நாடாளுமன்றத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும், தவறான தகவல்களை பரப்பக்கூடாது எனவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டறியப்பபட்டுள்ளது.
ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிப்பிரிவில் இருவரும் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இவரது உடல்நிலையும் சீராக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவர்கள் இருவரும் கொரோனா பாதித்த இத்தாலி மற்றும் தென்கொரிய நாடுகளுக்குச் சென்று வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.