சிறப்பு எஸ்.ஐ கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு சிறுவர்களும் நீதிமன்ற உத்தரவின் படி சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பூமிநாதன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் ஆட்டை திருடி சென்றுள்ளனர். இதனை பார்த்த பூமிநாதன் இருசக்கர வாகனத்தில் அந்த கும்பலை விரட்டி சென்று மடக்கி பிடித்துள்ளார். இதனால் கோபமடைந்த அவர்கள் பூமிநாதனை கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூமிநாதனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த வழக்கின் குற்றவாளிகளை பிடிப்பதற்காக 2 டிஎஸ்பிக்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனிப்படை காவல்துறையினர் இந்த வழக்கின் குற்றவாளிகளான ஒரு இளைஞனையும், 2 சிறார்களையும் நேற்று கைது செய்துள்ளனர். இந்த இரண்டு சிறார்களும் புதுக்கோட்டை சிறார் நீதிமன்ற குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதன் பின் நீதிபதியின் உத்தரவின் படி இருவரும் திருச்சி சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறப்பு எஸ்.ஐ கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரண்டு சிறார்களும் 5 மற்றும் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.