அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள சவுகஸ் (Saugus) மேல்நிலைப்பள்ளியில் இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. நேற்று பிறந்தநாளைக் கொண்டாடிய 16 வயது மாணவன், திடீரென்று தான் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அருகிலிருந்த மாணவர்களை நோக்கிச் சுடத்தொடங்கினார். பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலைக்கும் முயன்றார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த ஒரு 16 வயது மாணவியும், ஒரு 14 வயது மாணவனும் மருத்துவமனையில் உயிரிழந்தனர். மேலும், மூன்று பேர் அருகிலிருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்துள்ள மாணவனும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீரான பிறகு, விசாரணை நடத்த காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட அந்த மாணவனின் பெயர் அறிவிக்கப்படவில்லை.
அமெரிக்காவில் நடமாடும் துப்பாக்கி கலாசாரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் எனப் பலரும் கோரிக்கை வைத்துவரும் நிலையில், தற்போது மற்றொரு பயங்கர துப்பாக்கிச் சூடு மீண்டும் நிகழ்ந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதுபோன்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.