பெற்றோரை இழந்து விட்டோம்.. அதனால் எங்களை விடுதியில் தங்க வைத்து படிக்க வைக்ககோரி 2 மாணவிகள், பண்ருட்டி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து, கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டுள்ளனர்..
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள மாளிகைமேடு பகுதியை சேர்ந்தவர்கள் பாபு – லதா தம்பதியர்.. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.. இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னதாக பாம்பு கடித்து பாபு இறந்தார். அதன்பின் லதா தன்னுடைய மகள்களுடன் தனியாக வசித்து வந்த நிலையில், பாபு இறந்ததால் மனவேதனையில் இருந்து வந்த அவரும், உடல் நிலை பாதிக்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக இறந்து போனார்..
பெற்றோர் மறைந்ததை தொடர்ந்து, 3 பெண் குழந்தைகளும் தங்களது வயது முதிர்ந்த செந்தாமரை என்ற பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தனர். இதனிடையே பாபுவின் மூத்த மகள் திடீரென காணாமல் போனார்.. இதையடுத்து மூதாட்டி செந்தாமரை கடந்த சில வாரங்களாகவே போதிய வருமானமில்லாமல் தன்னுடைய பேத்திகள் ஜீவா (14) மற்றும் தர்ஷினி(10) ஆகியோருடன் மிகவும் தவித்து வந்தார்.
இந்தநிலையில் செந்தாமரை நேற்று முன்தினம் தன்னுடைய பேத்திகளை பண்ருட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்.. அப்போது ஜீவா மற்றும் தர்ஷினி ஆகியோர் அங்கிருந்த போக்குவரத்து காவலர் ராஜதீபன் என்பவரிடம், நாங்கள் பண்ருட்டியிலுள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றோம். எங்களுக்கு பெற்றோர் கிடையாது.. வயது முதிர்ந்த பாட்டியால் எங்களை மேற்கொண்டு படிக்க வைக்க இயலாததால், தாங்கள் எங்களை ஏதாவது ஒரு பாதுகாப்பான விடுதியில் தங்க வைத்து, படிக்க வைக்க வேண்டும் என கண்ணீர் மல்க கேட்டனர்.. இச்சம்பவம் காவல் நிலையத்துக்கு வந்த அனைவரையும் கண் கலங்க வைத்தது.
அப்போது மாணவி ஜீவா காவல்துறையினரிடம் கூறுகையில், எங்கள் பாட்டிக்கு மிகவும் வயதாகி விட்டதால், அவரால் வேலைக்கு போகமுடியவில்லை.. அதனால் அவங்களும் வீட்டில் தான் இருக்காங்க.. வருமானமில்லாததால் ஒரு நாளைக்கு ஒரு நேரம் சாப்பிடுறதே ரொம்ப சிரமமா இருக்கு.. இங்கிருக்கும் உறவினர்களிடமும் எந்த உதவியும் கேட்கும் நிலையில் அவர் இல்லை.. கடையில் கடனுக்கு டீ மற்றும் பண் வாங்கி தருவாங்க.. அதைத்தான் நாங்கள் பல நாட்கள் சாப்பிட்டோம்.. எப்போதாவது ஒருநாள் பக்கத்திலுள்ள உறவினர்கள் சாப்பாடு கொடுப்பாங்க. அதை நானும், என்னுடைய தங்கையும் பகிர்ந்து சாப்பிடுவோம்.. அப்புறம் அணிந்து கொள்வதற்கு மாற்று துணி கூட எங்ககிட்ட கிடையாது.. எங்ககிட்ட இருக்குற ஒரு சில சட்டையும் கிழிந்து போன நிலையில், அதையே ஊசி நூலால் மீண்டும் மீண்டும் தைத்து, மாற்றி மாற்றி போட்டுக்குவோம் என்றார்..
மேலும் மழை பெய்தால் வீடு முழுவதும் ஒழுகும்.. நாங்கள் இருக்குற கூரை வீடு கூட கடுமையாக சேதமடைந்து விட்டது.. இருப்பதற்கு கூட சரியான வீடு கிடையாது. அப்பா பாம்பு கடித்து இறந்து விட்டதால், அந்த வீட்டில் இருக்கவும் ரொம்ப பயமா இருக்கும். தற்போது சித்தி வீட்டில் தான் தர்ம சங்கடமான சூழ்நிலைகளில் இருந்து வருகிறோம்.. நாங்கள் யாருடைய ஆதரவும் இல்லாமல் இருக்கின்றோம். எங்களை ஏதாவது ஒரு பாதுகாப்பான விடுதியில் சேர்த்து படிக்க வைப்பீர்களா? என்று கேட்டு கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.. இதனைக் கேட்டு கண் கலங்கிய போலீஸ்காரர் ராஜதீபன், சிறுமிகள் 2 பேரும் தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் இருக்குமாறு கூறிவிட்டு, புது ஆடைகள் வாங்கி கொடுத்து, உடனே நிவாரண பொருட்களையும் வழங்கினார்.
இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி அறிந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், போலீஸ்காரர் ராஜதீபனுக்கு பாராட்டு தெரிவித்தார்.. மேலும் மாணவிகள் இருவரையும் தொண்டு நிறுவன உதவியுடன் அவர்கள் கல்வி தொடர ஏற்பாடுகளையும் செய்துள்ளார். இந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் நெகிழ்ச்சியை மிகவும் ஏற்படுத்தியுள்ளது.