தேனி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் தென்னை மரத்தில் மோதி நடைபெற்ற விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள ஓடைப்பட்டியில் விக்னேஷ்(32), முருகன்(45), சென்னையன்(48) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சீலநாயக்கன்பட்டியில் நடந்த ஒரு திருமண விழாவிற்கு சென்று விட்டு நேற்று முன்தினம் ஒரு இருசக்கர வாகனம் மூலம் 3 பேரும் ஓடைப்பட்டிக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து கண்டமனூர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தென்னை மரத்தில் இடித்துள்ளது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் வாகனத்தை ஓட்டி வந்த விக்னேஷுக்கும், நடுவில் அமர்ந்திருந்த சென்னையனுக்கும் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்த 2 பேரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் சென்னையன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தற்போது விக்னேஷுக்கு தீவிர சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றது. இச்சம்பவம் குறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.