கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது ராட்சத அலையில் சிக்கி 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள காசிமேடு பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் தனது நண்பர்களான கார்த்திக், தமிழ்செல்வன், உதயா, பிரகாஷ், முருகன் போன்றோருடன் காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே கடலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ராட்சத அலை வந்ததால் விக்னேஷ் தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக துறைமுக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு விக்னேஷின் சடலத்தை மீட்டனர். அதன்பிறகு காவல்துறையினர் விக்னேஷின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து நந்தகுமார் என்பவர் தனது நண்பரான எட்வின் என்பவருடன் எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் பகுதியில் இருக்கும் கடலில் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது எட்வினை ராட்சத அலை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதனை பார்த்ததும் அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் உடனடியாக எட்வினை மீட்டு கரைக்கு கொண்டு சென்றனர். அதன் பிறகு உடனடியாக எட்வினை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே எட்வின் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.