கும்பகோணத்தில் பெண்கள் உள்ள வீட்டின் முன்பு வந்து செல்போன் பேசக்கூடாது என கண்டித்த முதியவரை கொலை செய்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே இன்னம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான ரத்தினம் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வரும் பிரகாஷ் என்ற பெயர் கொண்ட 2 இளைஞர்கள் அவரது வீட்டின் அருகே நின்று செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். இதை பார்த்த ரத்தினம் அவர்கள் இருவரையும் கண்டித்து, தட்டிக் கேட்பதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அந்த இரண்டு இளைஞர்களும் அந்த முதியவரை அடித்து கீழே தள்ளியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக பலியானார்.
இதுபற்றி ரத்தினத்தின் மகன் ராமு போலீசில் புகார் அளித்ததையடுத்து தப்பி ஓடிய இளைஞர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் முதியவர் ரத்தினத்திற்கு கல்லூரி வயதில் ஒரு பெண் இருப்பதும், அதனால் அடிக்கடி அவர் பெண்கள் உள்ள வீட்டின் முன்பு வந்து செல்போன் பேசக்கூடாது என கண்டித்துள்ளார் என்பது போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.