அமெரிக்க அணு நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான ராணுவ ரகசியங்களை அமெரிக்க பொறியாளர் ஒருவர் வெளிநாட்டிற்கு விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேரிலேண்ட் என்ற பகுதியில் வசித்து வரும் பொறியாளர் Jonathan Toebbe (42) வெளிநாடு ஒன்றிற்கு கடற்படை ஆவணங்கள் சிலவற்றை அனுப்பியுள்ளார். அதன் மூலம் அணு நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான ரகசியங்களை தான் விற்பனை செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளார். ஆனால் அவர் எந்த நாட்டிற்கு கடற்படை ஆவணங்களை அனுப்பினார் என்பது குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை. ஆனால் தங்கள் நாட்டை சேர்ந்த ஒருவர் ராணுவ ரகசியங்களை விற்க முயற்சிக்கிறார் என்று அமெரிக்க அரசுக்கு அந்த நாடு ஆவணங்களை அனுப்பி உண்மையை தெரிவித்துள்ளது.
இதையடுத்து FBI அதிகாரிகள் கையும் களவுமாக Jonathan-ஐ பிடிக்க வேண்டும் என்பதற்காக FBI அதிகாரிகளில் ஒருவரை அந்த குறிப்பிட்ட வெளிநாட்டின் பிரதிநிதியை போலவே நடிக்க வைத்துள்ளனர். ஆனால் Jonathan முதலில் அவரை நம்ப மறுத்துள்ளார். அதன் பிறகு அந்த அதிகாரி Jonathan-க்கு கிரிப்டோகரன்சியாக 10 ஆயிரம் டாலர்களை அனுப்பியுள்ளார். இதையடுத்து Jonathan பல தகவல்களை அந்த நபருக்கு அனுப்பியுள்ளார். ஆனால் ஒரு FBI அதிகாரிக்கு தான் இவ்வாறு தகவல்களை அனுப்புகிறோம் என்பது கூட தெரியாமல் Jonathan இருந்துள்ளார்.
இவ்வாறு Jonathan-க்கு 100,000 டாலர்கள் வரை அந்த அதிகாரி அனுப்ப பதிலுக்கு Jonathan ஏராளமான தகவல்களை அனுப்பியுள்ளார். அதேசமயம் Jonathan பிடிபட்டு விடுவோம் என்ற அச்சத்தில் குடும்பத்தினருடன் வெளிநாடு செல்வதற்கான முன்னேற்பாட்டையும் செய்துள்ளார். இந்த நிலையில் Jonathan முக்கிய தகவல் ஒன்றை அளிப்பதற்காக குறிப்பிட்ட இடம் ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது அவருடைய மனைவி Diana (45) யாராவது வருகிறார்களா என்று பார்ப்பதற்காக காவலுக்கு இருந்துள்ளார். இந்த சமயத்தில் Jonathan மற்றும் Diana இருவரையும் கையும் களவுமாக பிடித்த FBI அதிகாரிகள் சாண்ட்விச் ஒன்றையும் jonathan இடமிருந்து கைப்பற்றியுள்ளனர்.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அந்த சாண்ட்விச்சுக்குள் பீநட் பட்டருக்கு நடுவில் பல முக்கிய தகவல்கள் அடங்கிய ஒரு மெமரி கார்டு பிளாஸ்டிக் கவர் ஒன்றிற்குள் இருந்துள்ளது. அதன் பிறகு Jonathan மற்றும் Diana இருவரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் டயானாவும் ஆசிரியர் பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க கடற்படையில் அணு நீர்மூழ்கிக் கப்பல்கள் தொடர்பான பணிகளில் jonathan கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் பொறியாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.