அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் போது ராஜ மரபினை மீறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அரசு முறைப்பயணமாக பிரித்தானியாவிற்கு வரும் மற்ற நாட்டை சேர்ந்த தலைவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் போது மகாராணியார் வருவதற்கு முன்னதாகவே அந்த இடத்திற்கு வருவது வழக்கம். அதேபோல் நிகழ்ச்சி முடிந்தவுடன் மகாராணியார் அந்த இடத்தை விட்டு புறப்பட்டு சென்ற பிறகே அங்கிருப்பவர்கள் புறப்பட வேண்டும். இதுதான் ராஜ மரபாக காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் உலகத்தலைவர்கள் ஜி-7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியாவிற்கு வந்துள்ள நிலையில் விருந்து நிகழ்ச்சி ஒன்று இங்கிலாந்தில் உள்ள கார்ன்வால் என்னும் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பல தலைவர்களும் மகாராணியார் வருவதற்கு முன்னதாகவே நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்து விட்டனர்.
ஆனால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மட்டும் மகாராணியார், கமீலா, இளவரசர் சார்லஸ், கேட் ஆகியோர் நிகழ்ச்சிக்கு வந்த பிறகு ஐந்து நிமிடம் கால தாமதமாகி காரில் வந்துள்ளார். இது ராஜ மரபினை மீறுவதாக இருந்தாலும் மகாராணியாரோ அல்லது அங்கிருந்தவர்களோ அதனை சிறிதும் கண்டுகொள்ளவில்லை.
மேலும் மகாராணியார் அமெரிக்க அதிபரான ஜோ பைடனை சந்திப்பது இதுவே முதன்முறை என்பதால் அவர் தன்னுடைய முகத்தில் மகிழ்ச்சியை மட்டுமே புன்னகையால் வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. மகாராணியார் ஜோ பைடனிடம் மட்டுமல்லாமல் அனைத்து தலைவர்களுடனும் முகத்தில் புன்னகையுடன் பேசிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.