Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#UAEvNED : திக் திக்…. 3 விக்கெட் வித்தியாசத்தில்….. “யுஏஇ அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி..!!

டி20 உலகக்கோப்பை 2ஆவது தகுதிச்சுற்று போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் யுஏஇ அணியை நெதர்லாந்து அணி வீழ்த்தியது.

8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ஆஸ்திரேலியாவில் தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் ஆஸியின் 7 நகரங்களில் நடைபெறுகிறது. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் இடம் பிடித்திருக்கிறது, அதில் ஏ பிரிவில் இலங்கை, நமீபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவிலுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இறுதியில் இரு டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.

இந்தியா உட்பட 8 அணிகள் ஏற்கனவே சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று காலை 9:30 மணிக்கு தொடங்கிய முதல் சுற்றுப் போட்டியில் இலங்கை மற்றும் நமீபியா அணிகள் கீலாங் மைதானத்தில் மோதியது. இதில் முதலில் ஆடிய நமீபியா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 163 ரன்கள் எடுத்தது. பின் ஆடிய இலங்கை அணி 19 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் எடுத்து அதிர்ச்சி தோல்வியடைந்தது.

இந்நிலையில் அதே மைதானத்தில் நெதர்லாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்  அணிகள் மோத உள்ளது. இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக கேப்டன் சி.பி ரிஸ்வான் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தின் தொடக்க வீரர்களான சிராக் சூரி மற்றும் முஹம்மது வசீம் ஆகிய இருவரும் களமிறங்கினர். இதில் தொடக்க வீரர் சிராக் சூரி 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

 

அதை தொடர்ந்து வந்த காஷிப் தாவுத் 15, விருத்தியா அரவிந்த் 18, ஜாவர் ஃபரித் 2, பாசில் ஹமீது 4, கேப்டன் சி.பி ரிஸ்வான் 1, அயன் அப்சல் கான் 5 என அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.. இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் முஹம்மது வசீம் பொறுமையாக ஆடி 41 (47) ரன்கள் எடுத்ததால் யுஏஇ அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக பாஸ் டி லீடே 3 விக்கெட்டுகளும், பிரெட் கிளாசென் 2 விக்கெட்டுக்களும் எடுத்தனர்.

இதனையடுத்து நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக விக்ரம் ஜித் சிங் மற்றும் மேக்ஸ் ஓ’டவுட் இருவரும் களமிறங்கினர். விக்ரம் ஜித் சிங் 10 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், மேக்ஸ் ஓ’டவுட் நல்ல தொடக்கம் கொடுத்த நிலையில் அவரும் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை விட்டனர். அதன்படி பாஸ் டி லீட் 14, கொலின் அக்கர்மேன் 17, டாம் கூப்பர் 8,  ரோலோஃப் வான் டெர் மெர்வே 0 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை விட்டனர். இதனால் 13.3 ஓவரில் 76 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்திருந்தது. அப்போது ஸ்காட் எட்வர்ட்ஸ் – டிம் பிரிங்கிள் இருவரும் பொறுமையாக தட்டி ஆடினர்.

கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டபோது, ஜாகூர் கான் வீசிய அந்த ஓவரின் 3ஆவது பந்தில் பிரிங்கிள் (15) போல்ட் ஆகி வெளியேற, நெதர்லாந்துக்கு 4 ரன்கள் கிடைத்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட பரபரப்பான நேரத்தில் லோகன் வான் பீக் உள்ளே வர அந்த ஓவரில் 1,1,1,2 என நான்கு பந்துகளில் 5 ரன்கள் கிடைத்தது. கடைசி 2 பந்தில் 1 ரன்கள் தேவைப்பட எட்வர்ட்ஸ் சிங்கிள் எடுத்தார். இதனால் நெதர்லாந்து அணி 19.5 ஓவரில் 7 விக்கெட் இழந்து 112 ரன்கள் எடுத்து வென்றது. எட்வர்ட்ஸ் 16 ரன்களுடனும், லோகன் வான் பீக் 4 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக ஜுனைத் சித்திக் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

Categories

Tech |